ECONOMYNATIONAL

 கெஅடிலான் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியா? முடிவெடுக்கவில்லை என்கிறார் சைபுடின்

கோலாலம்பூர், மார்ச் 28– அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கெஅடிலான் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து தாம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

இதன் தொடர்பில் முடிவெடுப்பதற்கு முன்னர் அனைத்து தரப்பினரின் கருத்துகளைத் தாம் பெறவுள்ளதோடு இந்த தேர்தல் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சகோதரத்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாமலிருப்பதை உறுதி செய்ய செய்யவும் விரும்புவதாக அவர் சொன்னார்.

இது போன்ற பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் அனைத்து தலைவர்களின் கருத்தையும் பெறுவது எனது இயல்பாகும். அந்த நடவடிக்கையில் நான் ஈடுபட்டு வருகிறேன். பொருத்தமான தருணம் வாய்க்கும் போது இது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றார் அவர்.

இது போன்ற போட்டிகள் சகோதரத்துவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதுதான் என நிலைப்பாடாகும். இதனையே எனது அரசியல் சித்தாந்தமாகவும் கொண்டுள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள லெம்பா பந்தாய் கெஅடிலான் தொகுதி கூட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்.

கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடவுள்ளதாக கட்சி உதவித் தலைவர் ரபிஸி ரம்லி முன்னதாக கூறியிருந்தார். அதே சமயம் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் அரசியல் செயலாளர் பார்ஷா வாஃபா செல்வடோர் ரிசால் முபாராக்கும் இப்பதவிக்கு குறி வைத்துள்ளார்.


Pengarang :