ECONOMYHEALTHNATIONAL

முழு தடுப்பூசித் தகுதியை இழக்காதிருக்க ஊக்கத் தடுப்பூசியை விரைந்து பெறுவீர்- சுகாதார அமைச்சு கோரிக்கை

ஷா ஆலம், மார்ச் 28- சினோவேக் தடுப்பூசியை முதன்மை தடுப்பூசிகளாக பெற்ற 18 வயதுக்கும் மேற்பட்டவர்களும் 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களும் ஊக்கத் தடுப்பூசியை விரைந்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வரும் ஏப்ரல் முதல் தேதிக்குள் அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் மைசெஜாத்ரா செயலியில் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றதற்கான தகுதியை இழக்க நேரிடும் என்று சுகாதார அமைச்சு எச்சரித்தது.

எனினும், சுகாதார அமைச்சின் இந்த முடிவு பைசர், ஆஸ்ட்ராஸேனோகா மற்றும் கேன்சினோ தடுப்பூசிகளைப் பெற்ற 18 வயதுக்கும் மேற்பட்டவர்களை பாதிக்காது என்று அது தெரிவித்தது.

ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருக்கும் சினோவேக் தடுப்பூசியைப் பெற்ற சுமார் 20 லட்சம் பேர் வரும் ஏப்ரல் 1 தேதிக்கு பிறகு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றதற்கான தகுதியை இழப்பதற்கான அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கடந்த 24 ஆம் தேதி எச்சரித்திருந்தார்.

சினோவேக் தடுப்பூசியை பிரதான ஊசியாகப் பெற்ற 18 வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஊக்கத் தடுப்பூசியை பெறுவதற்கு சுகாதார அமைச்சு தொடக்கத்தில் மார்ச் 1 ஆம் தேதி வரை காலக்கெடு விதித்திருந்தது.

எனினும், அத்தரப்பினர் ஊக்கத் தடுப்பூசியை பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் அந்த கால அவகாசத்தை ஏப்ரல் 1 தேதி வரை அமைச்சு நீடித்தது.


Pengarang :