ECONOMYNATIONALSELANGOR

வெ.10,000 பண மீட்புத் திட்டம் இ.பி.எஃப். முதலீட்டு வியூகத்தை பாதிக்காது- சேம நிதி வாரியம் நம்பிக்கை

கோலாலம்பூர், ஏப் 1- சந்தாதாரர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து 10,000 வெள்ளியை மீட்பதற்கு அமல்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டத்தினால் ஊழியர் சேம நிதி வாரியத்தின் (இ.பி.எஃப்.) 2022 ஆம் ஆண்டிற்கான முதலீட்டு வியூகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அதன் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஸிசான் கூறினார்.

அத்தகைய வியூகங்களை செயல்படுத்துவதற்குரிய ஆற்றலை இ.பி.எஃப். எப்போதும் கொண்டுள்ளது. இருப்பினும், மீட்கப்பட்ட பணத்தை உறுப்பினர்கள் ஈடுசெய்வதை உறுதி செய்வதுதான் எங்களின் நீண்ட கால இலக்காக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அந்த பண மீட்புத் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆகவே, அது அமல்படுத்தப்படும். இத்தகைய திட்டங்களுக்கு இ.பி.எஃப். எப்போதும் ஆதரவளித்து வரும் என்று இ.பி.எஃப்.பின் நீடித்த முதலீட்டுக் கொள்கை மற்றும் அயல்நிதி மேலாண்மை உறுதி மொழி நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மலேசிய குடும்பத்தின் சுமையைக் குறைக்கும் நோக்கில் சேம நிதி வாரியத்திலிருந்து உறுப்பினர்கள் 10,000 வெள்ளி வரை மீட்பு அனுமதிக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த மாதம் 16 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :