ECONOMYHEALTHNATIONAL

ரமலான் சந்தைகளுக்கு சிறார்களை அழைத்து வராதீர்- பெற்றோர்களுக்கு அறிவுறுத்து

பாகான் செராய், ஏப் 4- கோவிட்.19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவதிலிருந்து தடுப்பதற்கு ஏதுவாக சிறார்களை ரமலான் சந்தைகளுக்கு அழைத்து வர வேண்டாம் என பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கூட்ட நெரிசல்மிக்க இடங்கள் சிறார்களுக்கு குறிப்பாக கோவிட்-19 தடுப்பூசியை இன்னும் பெறாதவர்களுக்கு  பாதுகாப்பானவை அல்ல என்று துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர்  நோர் அஸ்மி கசாலி கூறினார்.

நோன்பு மாதத்தின் முதல் நாளான நேற்று பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ரமலான் சந்தைகளுக்கு அழைத்து வந்ததை காண முடிந்தது. ஜன நெரிசல் மிகுந்த இடங்களுக்கு கூடுமானவரை பிள்ளைகளை அழைத்து வர  வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். நோன்புப் பெருநாளை சோகமான சூழலில் மருத்துவமனைகளில் கொண்டாடும் சூழல் ஏற்படுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை என்றார் அவர்.

சிறார்களில் 38 விழுக்காட்டினர் மட்டுமே இதுவரை தடுப்பூசி பெற்றுள்ள வேளையில் இளையோரில் 91.7 விழுக்காட்டினரும் ஊக்கத் தடுப்பூசியை பெரியவர்களில் 67.3 விழுக்காட்டினரும்  இதுவரை பெற்றுள்ளதை தரவுகள் காட்டுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

சிறார்களுக்கான தடுப்பூசி இயக்கம் மிகவும் மந்தமாக உள்ளதை இந்த தரவுகள் காட்டுவதாக கூறிய அவர், தங்கள் பிள்ளைகளுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்தப்படுவதை பெற்றோர்கள் உறுதி செய்வர் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் சொன்னார்.


Pengarang :