ECONOMYNATIONAL

கோவிட்-19 தொடர்புடைய சொக்சோ இழப்பீட்டு கோரிக்கைகள் தொழில் சார்ந்த நோய்கள் பிரிவின் கீழ் பரிசீலனை

கோலாலம்பூர், ஏப்ரல் 4 – இவ்வாண்டு ஏப்ரல் முதல் தேதி தொடங்கி கோவிட்-19 தொடர்பான இழப்பீட்டு கோரிக்கைகள் தொழில் சார்ந்த நோய்கள் பிரிவின் கீழ் பரிசீலிக்கப்படும் என்று சொச்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனம் கூறியது.

கோவிட்-19 தவிர்த்து மற்ற தொற்று நோய்களான  நிபா வைரஸ் தொற்று, காசநோய் மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலி சிறுநீர் நோய் ஆகியவை தொழில்சார் நோய்களின் பிரிவின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக சொக்சோ நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

சொக்சோ காப்புறுதி பெற்றவர்கள் இழப்பீடு கோர விரும்பினால், அந்த விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும், உயிரியல் சார்ந்த ஆபத்து கொண்ட தொழிலில் ஈடுபட்டவர்கள் மற்றும் நோய்த் தொற்றுக்கான ஆபத்து கொண்ட சுகாதாரப் பணியாளர்களை மட்டுமே இதற்கு விண்ணப்பம் செய்ய முடியும் என அது தெரிவித்தது.

தொழில்சார் நோய் எனும் அடிப்படையில் அந்த  விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்பதோடு தகுதி உள்ள சொச்சோ பயனாளிகள் தற்காலிக முடத்தன்மை சலுகை, நிரந்தர முடத்தன்மை சலுகை, உயிர்ப் பிழைத்தவருக்கான  ஓய்வூதியம், இறுதிச் சடங்கு உதவி நிதி ஆகியவற்றைப் பெறத் தகுதி படைத்துள்ளனர் எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

ஏப்ரல் முதல் தேதிக்கு முன்னர் கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விண்ணப்பங்கள் வேலையிட பேரிடர் திட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படும் என்று அவ்வறிக்கை மேலும் தெரிவித்தது.

இவ்வாண்டு மார்ச் 26 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் உள்நாட்டு மற்றும் அந்நியத் தொழிலாளர்களிடமிருந்து 132,988  பேரிடமிருந்து சொக்சோ கோவிட்-19 தொடர்பான இழப்பீட்டு கோரிக்கைகளைப் பெற்றது.


Pengarang :