ECONOMY

சப்புரா எனர்ஜி விவகாரம் மீது விவாதம்- நஜிப்பின் சவாலை ஏற்றார் அன்வார்

ஷா ஆலம், ஏப் 4- முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குடன் பொது விவாதத்தில் பங்கு கொள்ளத் தாம் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் பாண்டான் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி பரிந்துரையை முன்வைத்ததைத் தொடர்ந்து நஜிப்பின் இந்த சவாலை ஏற்க தாம் முன்வந்துள்ளதாக கெஅடிலான் கட்சியின் தலைவருமான அவர் சொன்னார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பொது விவாதத்திற்கு சவால் விடுத்துள்ளது எனது கவனத்திற்கு வந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற சவாலை நஜிப்பிற்கு நான் விடுவித்துள்ளேன். ஆனால், அவர் அதனை ஏற்கவில்லை. இது போன்ற சவால்களிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்கியதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மக்கள் வறுமையில் வாடும் நிலையிலும் சிறு வணிகர்களின் நலன் காக்கப்படாத சூழலிலும் சப்புரா நிறுவனத்தை இழப்பிலிருந்து மீட்கும் விவகாரம் தொடர்பில் ரபிஸி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாமல் நஜிப் ரமலான் மாத தொடக்கத்தில் என்னை சவாலுக்கு அழைக்கிறார் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.

சப்புரா எனர்ஜி பெர்ஹாட் நிறுவனம் தொடர்பில் விவாதிப்பதற்கு  ரபிஸி விடுத்த அழைப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக கூறிய நஜிப், இவ்விவகாரம் தொடர்பான பொது விவாதத்தில் அன்வாரும் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

சப்புரா நிறுவனம் 800 கோடி வெள்ளி  இழப்பை பதிவு செய்திருந்ததோடு அந்த தலைமை செயல்முறை அதிகாரிக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட்ட நிலையில் அந்நிறுவனத்தை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும் என்று நஜிப் வலியுறுத்தியிருந்தார்.


Pengarang :