ECONOMYNATIONAL

நோன்பு பெருநாளின் போது 20 லட்சம் வாகனங்கள் கிளந்தானில் நுழையும்- போலீஸ் கணிப்பு

பாசீர் பூத்தே, ஏப் 6- நோன்புப் பெருநாள் சமயத்தில் சுமார் 20 லட்சம் வாகனங்கள் கிளந்தான் மாநிலத்தில் நுழையும் என எதிர்பார்க்கப்படுவதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாபியன் மாமாட் கூறினார்.

ரமலான் மாதம் தொடங்கிய போது மாநிலத்தில் ஏற்பட்ட வாகன நெரிசலை அடிப்படையாகக்  கொண்டு இந்த எண்ணிக்கை கணிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

நோன்புப் பெருநாளின் போது சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக மாநிலத்தின் முக்கிய இடங்களில் போலீஸ்காரர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று அவர்  தெரிவித்தார்.

அண்மையில் நோன்பு மாதம் தொடங்கிய போது பலர் சொந்த ஊர்களில் நோன்பு துறப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டப் பின்னர் வேலையிடங்களுக்குத் திரும்பினர். வெளி மாநிலங்களில் வேலை செய்யும் அனைவரும் நோன்புப் பெருநாளின் போது மீண்டும் சொந்த ஊர்களுக்குத் திரும்புவர் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

நேற்று இங்கு  பாசீர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைவரின் பதவி ஏற்பு மற்றும் பதவி ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :