ECONOMY

நஜிப்புடன் பொது விவாதம்- பொருத்தமான நேரத்தை தேர்ந்தெடுப்பதில் அன்வார் மும்முரம்

ஷா ஆலம், ஏப் 6– சப்புரா எனர்ஜி பெர்ஹாட் நிறுவனத்தின் சர்ச்சை தொடர்பில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குடன் விவாதம் நடத்துவதற்கான சரியான நேரத்தை தேர்ந்தெடுப்பதில் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அந்த முன்னாள் பிரதமருடன் தாம் நடத்தவிருக்கும் விவாதம் ஊடகங்களில் விரிவான அளவில் ஒளிபரப்பப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக கெஅடிலான் கட்சித் தலைவருமான அன்வார் தெரிவித்தார்.

இந்த பொது விவாதத்திற்கான இடம் மற்றும் நேரத்தை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்படி லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரும் கெஅடிலான் கட்சியின் தொடர்பு பிரிவுத் தலைவருமான ஃபாமி ஃபாட்சிலை தாம் பணித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

நாடு மற்றும் சப்புரா நிறுவனம் தொடர்புடைய அந்த சிறப்பு விவாதம் இடம் பெறுவதற்கான இடம் மற்றும் தேதியை உறுதி செய்வது குறித்து டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தரப்புடன் கலந்தாலோசிக்கும்படி லெம்பா பந்தாய் உறுப்பினர் ஃபாமி ஃபாட்சிலை நான் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் அவர்.

இந்த விவாதம் விரிவான அளவில் ஒளிபரப்பப்பட வேண்டும் என தாம் விரும்புவதால் இதனை ஒளிபரப்புவது தொடர்பில் ஊடகங்களுடன் விவாதிக்கும்படியும் தாம் ஃபாமியை கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சப்புரா எனர்ஜி நிறுவன விவகாரம் தொடர்பில் பொது விவாதம் நடத்த வருமாறு பாண்டான் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி நஜிப்பிற்கு சவால் விடுத்திருந்தார்.

அந்த சவாலை ஏற்றுக் கொண்ட நஜிப், எனினும் இந்த விவாதத்தில் அன்வாரும் பங்கு கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்தார். அந்த நிபந்தனையை அன்வாரும் ஏற்றுக் கொண்டார்.


Pengarang :