ECONOMY

அதிக புகார்கள் கிடைக்கும் வர்த்தக மையங்களுக்கு மீது விசாரணை- உள்நாட்டு வாணிக அமைச்சு எச்சரிக்கை

புத்ரா ஜெயா, ஏப் 6- பயனீட்டாளர்களிடமிருந்து அதிக புகார்கள் கிடைக்கும் வணிக மையங்கள் அல்லது அங்காடி கடைகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு கூறியுள்ளது.

அத்தகைய வணிக மையங்களில் விசாரணை நடத்துவதில் வாங்கப்படும் கச்சாப் பொருள்களின் விலை, தயாரிப்பு செலவினம், நடவடிக்கை செலவினம், உற்பத்தி மற்றும் மொத்த விற்பனை நிலையில் விதிக்கப்படும் விலை ஆகிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

வணிகர்கள் அதிகம் லாபம் ஈட்டுவது கண்டுபிடிக்கப்பட்டால் 1966 ஆம் ஆண்டு விநியோகச் சட்டம் மற்றும் 2011 ஆம் ஆண்டு கொள்ளை லாபத் தடுப்பூசி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நோன்பு பெருநாள் சமயத்தில் பொருள்கள் விலையேற்றம் காண்பதை தடுப்பதற்கு ஏதுவாக அனைத்து வணிகர்களும் குறிப்பாக நோன்பு மாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட சட்டங்களை பின்பற்றி நடக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். விதிகளை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

ஓப்ஸ் பந்தாவ் 2022 நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதும் பொருள் விலையை கண்காணிக்கும் பணியில் அமைச்சின் 2,500 அமலாக்க அதிகாரிகளும் அவர்களுக்கு உதவியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலை கண்காணிப்பு அதிகாரிகளும் பணியில் ஈடுபடுவர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த ஓப்ஸ் பந்தாவ் இயக்கம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை நாடு முழுவதும் 7,106 வர்த்தக மையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், அவற்றில் 17 மையங்களுக்கு பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 4,200 வள்ளி அபராதம் விதிக்கப்பட்டது என்றார்.


Pengarang :