ECONOMYNATIONAL

பட்டாசு கடத்தப்படுவதை தடுக்க நாட்டின் எல்லையில் கூடுதல் பாதுகாப்பு

பாலிங், ஏப் 8- நோன்புப் பெருநாள் காலத்தில் பட்டாசுகள் மற்றும் வாணவெடிகள் நாட்டிற்குள் கடத்தப்படுவதை தடுக்க புக்கிட் காயு ஹீத்தாமில் உள்ள எல்லை நுழைவாயிலில் அமலாக்க அதிகாரிகள் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர்.

வாணவெடிகளை எல்லை நுழைவாயில் வழியாக நாட்டிற்குள் கொண்டு வருவதற்கான அனுமதியைக் கோரி சில நிறுவனங்கள் மட்டுமே தற்போது விண்ணப்பம் செய்துள்ளதாக கெடா மாநில போலீஸ் தலைவர் வான் ஹசான் வான் அகமது கூறினார்.

பட்டாசு இறக்குமதி செய்வதற்கு முறையான லைசென்ஸ் கோரி இரண்டு அல்லது மூன்று நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளன. மற்றத் தரப்பினர் சட்டவிரோதமாக பட்டாசுகளை நாட்டிற்குள் கடத்தி வருவதற்கான சாத்தியம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம் என்றார் அவர்.

கை,கைவிரல் போன்ற உடல் பாகங்கள் துண்டிக்கப்படுவது போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய பட்டாசு வகைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

லைசென்ஸ் பெற்றவர்கள் மட்டுமே வாணவெடிகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதாக கூறிய அவர், சில தினங்களுக்கு முன்னர் பட்டாசு வகைகளை நாட்டிற்குள் கடத்த முயன்றது தொடர்பில் சில கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றார்.

இதனிடையே, புக்கிட் காயு ஹீத்தாம் எல்லை இம்மாதம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் நுழைவாயிலில் வாகன எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆறு தினங்களாக நாளொன்றுக்கு 100 வாகனங்கள் வரை எல்லையை கடக்கின்றன அல்லது நாட்டிற்குள் வருகின்றன என்று அவர் சொன்னார்.


Pengarang :