ECONOMYNATIONAL

உத்தேச அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா மே மாதத்திற்குள் அங்கீகரிக்கப்பட வேண்டும்

கோலாலம்பூர், ஏப் 11- அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக் கொண்டதைப் போல் உத்தேச அரசியலமைப்புச் சட்ட திருத்தமும் கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதாவும் வரும் மே மாதத்திற்குள் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பக்கத்தான் தலைவர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி துவாங்கு ஜபாருடன் பக்கத்தான் ஹராப்பான் தலைவர்கள் நடத்திய சந்திப்பில் இவ்விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக தலைவர் மன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

அந்த சந்திப்பில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மற்றும் கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா ஆகிய விவகாரங்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருந்ததாக அவ்வறிக்கை தெரிவித்தது.

இந்த அறிக்கையில் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சித் தலைவர் முகமது சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோ சியு பூக், அப்கோ கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ வில்ப்ரட் மேடியஸ் தங்காவ் ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.


Pengarang :