ECONOMYSELANGOR

சிலாங்கூரில் கோழி விலையை கண்காணிக்கும் பணியில் 330 அமலாக்க அதிகாரிகள்

ஷா ஆலம், ஏப் 12– சிலாங்கூர் மாநிலத்தில் கோழி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருளின் விலையை கண்காணிக்கும் பணியில் உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் 330 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கையை அவர்கள் வரும் மே 5 ஆம் தேதி வரை பெரிய மார்க்கெட்டுகள், மளிகைக் கடைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகளில்  மேற்கொள்வர் என்று பயனீட்டாளர் விவகாரங்களுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னி கூறினார்.

நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பு விலையில் பொருள்கள் விற்கப்படுகிறதா என்பதை அந்த அதிகாரிகள் சோதனை செய்வர் எனக் கூறிய அவர், நிர்ணயிக்கப்பட்ட அந்த விதிமுறைகளை வணிகர்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறும் வணிகர்கள் மீது 2011 ஆம் ஆண்டு கொள்ளை லாபத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுவரை நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக விலையில் கோழி விற்றது தொடர்பில் கிள்ளான், பூச்சோங் மற்றும் காஜாங்கில் மூன்று வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

கோழி விற்பதற்கான லைசென்ஸ் கொண்டிராத காரணத்திற்காகவும் அவர்களில் இருவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.


Pengarang :