ECONOMYSELANGOR

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் 400 பேருக்கு நோன்புப் பெருநாள் பற்றுச் சீட்டுகள் விநியோகம்

ஷா ஆலம், ஏப் 14– நோன்புப் பெருநாளை முன்னிட்டு செந்தோசா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த  400 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.

மாநில அரசின் ஜோம் ஷோப்பிங் ராயா திட்டத்தின் கீழ் பயன் பெறுவோரின் பட்டியல் தொகுதியிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் சூராவ் மூலம் பெறப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

நூறு வெள்ளிக்கான அந்த பற்றுச் சீட்டுகளை வரும் 23 ஆம் தேதி விநியோகிப்பதற்கு ஏதுவாக பங்கேற்பாளர்களின் பெயர்ப் பட்டியலைத் தாங்கள் தயார் செய்து வருவதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

குறைந்த வருமானம் பெறுவோர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதில் எதிர்நோக்கும் சிரமத்தைக் குறைப்பதில் இந்த திட்டம் துணை புரியும். சம்பந்தப்பட்டவர்கள் கம்போங் ஜாவா, எகாகோன்சேவ் பேரங்காடியில் இந்த பற்றுச் சீட்டுகளை கொடுத்து தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்றார் அவர்.

இவ்வாண்டு நோன்புப் பெருநாளின் போது பி40 தரப்பைச் சேர்ந்த 33,400 குடும்பங்களுக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை விநியோகிப்பதற்காக மாநில அரசு 33 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியை  ஒதுக்கியுள்ளது.


Pengarang :