ECONOMYHEALTHNATIONAL

டிங்கி அபாயம்- அலட்சியம் காட்டாமல் விரைந்து சிகிச்சை பெறுவீர்- மலேசிய மருத்துவ சங்கம் ஆலோசனை

கோலாலம்பூர், ஏப் 14- டிங்கி காய்ச்சல் அபாயம் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக காய்ச்சல், வயிற்றுப் போக்கு, உடல் வலி போன்ற உபாதைகள் உள்ளவர்கள் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளும் அதே வேளையில் காய்ச்சலுக்கான சோதனைகளையும் மருத்துவ மையங்களில் மேற்கொள்ளும்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

டிங்கி காய்ச்சல் அபாயம் மக்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருவதாக மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் கூ கார் சாய் கூறினார்.

எனினும், ஈராண்டுகளுக்கு முன்னர் கோவிட்-19 நோய்த் தொற்று பரவியது முதல் மக்கள் அந்த பெருந்தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் அதிகம் முக்கியத்துவம் தருகின்றனர். இதனால் மற்ற நோய்களை அவர்கள் அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை என்று அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு உள்ளதை போல் சோதனைக் கருவி வசதி இல்லாத காரணத்தால் தொடர்ச்சியாக காய்ச்சல் கண்டவர்கள் மருத்துவரை நாடி டிங்கி நோய் தொடர்பான சோதனையை மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

இந்த பெருந்தொற்று பரவல் காலத்தில் கோவிட்-19 நோய் பற்றியே அதிக அக்கறை கொள்ளும் மக்கள் டிங்கி அபாயத்தை மறந்து விடுகின்றனர். டிங்கி நம்மிடையே இன்னும் உள்ளதோடு அதன் அபாயம் குறித்து நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.

டிங்கி அல்லது கோவிட்-19 பரவல் காரணமாக வயது வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. மேலும் நீரிழிவு, இருதய நோய் உள்ளவர்களுக்கும் சிறார்களுக்கும் நோய்த் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :