ECONOMYSELANGOR

அனுமதியின்றி சுயசேவை சலவை நிலையம் நடத்திய ஆடவருக்கு வெ.600 அபராதம்

ஷா ஆலம், ஏப் 14– முறையான லைசென்ஸ் இன்றி சுய சேவை சலவை நிலையத்தை நடத்தியதாக ஆடவர் ஒருவர் கோல லங்காட், தெலுக் டத்தோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

இக்குற்றத்திற்காக அவ்வாடவருக்கு 600 வெள்ளி அபராதம் விதித்த மாஜிஸ்திரேட் அபராதத்தை கட்டத் தவறினால் ஐந்து நாள் சிறைத்தண்டனை விதித்தார். எனினும், அவ்வாடவர் அபராதத் தொகையைச் செலுத்தினார்.

உலு லங்காட் நகராண்மைக் கழகத்தின் 2007 ஆம் ஆண்டிற்கான வர்த்தக மற்றும் தொழில்துறை லைசென்ஸ் துணைச் சட்டத்தின் 3 வது பிரிவின் கீழ் அவ்வாடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததாக நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இதனிடையே, கட்டணம் செலுத்தாமல் காரை நகராண்மைக் கழக கார் நிறுத்துமிடத்தில் நிறுத்திய குற்றத்திற்காக 2007 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து விதிகளின் 8 வது ஷரத்தின் கீழ் இரு ஆடவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அப்பதிவு தெரிவித்தது.

அவ்விருவருக்கும் முறையே வெ. 150.00 மற்றும் வெ.100.00 அபராதம் விதிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது.


Pengarang :