ECONOMY

காஜாங் போலீஸ் நிலைய லாக்கப்பில் கைதி மரணம்- போலீசார் உறுதிப்படுத்தினர்

கோலாலம்பூர், ஏப் 14- காஜாங் போலீஸ் நிலைய லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று உயிரிழந்ததை  அரச மலேசிய போலீஸ் படை நேற்று உறுதிப்படுத்தியது.

நாற்பத்தைந்து வயதான அந்த கைதி 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 12(2) பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததாக புக்கிட் அமான் உயர்நெறி, விதிமுறை அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்ரி அகமது கூறினார்.

அவ்வாடவர் நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்து விசாரணை கோரியிருந்தார். அவருக்கு பிணை வழங்க யாரும் வராததால் பெரேனாங் ஒருங்கிணைந்த சிறைச்சாலைக்கு கொண்டுச் செல்லப்படுவதற்கு முன்னர் அவர் காஜாங் போலீஸ் நிலைய லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்று  அஸ்ரி தெரிவித்தார்.

எனினும் நேற்று காலை 10.32 மணியளவில் அந்த கைதி வலிப்பு நோய்க்கு ஆளானதை காவலில் இருந்த போலீஸ்காரர் மருத்துவமனையை உடனடியாக தொடர்பு கொண்டார். காலை 10.45 மணியளவில் போலீஸ் நிலையம் வந்த மருத்துவக் குழு அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றது.

எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவ்வாடவர் உயிரிழந்ததை மருத்துவ உதவியாளர்கள் உறுதிப்படுத்தினர். அவரின் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அஸ்ரி கூறினார்.

இச்சம்பவம் குறித்து காவல் துறையின் தடுப்புக் காவல் விசாரணைப் பிரிவு விசாரித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :