ECONOMYNATIONAL

எண்டமிக் கட்டம்- சிலாங்கூர் வரும் அந்நிய சுற்றுப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஷா ஆலம், ஏப் 15– நாடு இம்மாத தொடக்கத்தில் எண்டமிக் கட்டத்தில் நுழைந்ததைத் தொடர்ந்து சிலாங்கூருக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இதுநாள் வரை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த தொழில்துறைகள் மீண்டும் உயிர்ப்பித்துள்ளதோடு ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா மையங்களுக்கும் புத்துயிர் ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

சுற்றுப்பயணிகள் வருகை தொடர்பான தரவுகள் இல்லாத போதிலும் நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டப் பின்னர் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நம்புகிறேன். நாட்டின் பிரதான நுழைவாயிலாக விளங்கும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கே.எல்.ஐ.ஏ.) சிப்பாங்கில் அமைந்துள்ளதால் மாநிலம் மேலும் அதிகமான சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்குரிய வாய்ப்பினை கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பல நாடுகள் இன்னும் தங்கள் எல்லைகளை மூடி வைத்துள்ளதால் நோய்த் தொற்று அபாயம் இல்லாத 2019 ஆம் ஆண்டுக்கு முந்தைய சூழலை  தற்போது எதிர்பார்க்க முடியாது. எனினும் நிலைமை 2020 ஆண்டை விட சற்று மேம்பட்டிருக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள ஐ-சிட்டியில் நடைபெற்ற கோ சிலாங்கூர் செயலியை உருவாக்குவது தொடர்பில் டூவர்பிளஸ் டெக்னோலோஜி நிறுவனத்திற்கும் டூரிசம் சிலாங்கூருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :