ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

மாநில அரசின் நிதியுதவி- மண் சரிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நன்றி

அம்பாங், ஏப் 17- கடந்த மார்ச் மாதம் இங்குள்ள தாமான் புக்கிட் பெர்மாய் குடியிருப்பில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டத் தங்களுக்கு நிதியுதவி வழங்கி பொருளாதார சுமையை ஓரளவு குறைக்க முன்வந்த மாநில அரசுக்கு பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்த பேரிடரில் தந்தையை இழந்து வாடும் தங்களுக்கு மாநில அரசின் இந்த உதவி சற்று ஆறுதலாக உள்ளதாக ஆர். ரமாபாரதி (வயது 23) கூறினார்.

அந்த இயற்கைச் சீற்றத்தில் எங்கள் தந்தை சி. இராமசாமியை பறிகொடுத்தோம். அன்னாரின் மறைவினால் ஏற்பட்ட துயரிலிருந்து நாங்கள் குறிப்பாக எங்கள் தாயார் இன்னும் மீளவில்லை என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

தன் கணவரின் பிரிவை எங்கள் தாயாரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை . அவர் இன்னும் துக்கத்தில் இருக்கிறார். அதனால் இந்த நிதியைப் பெறுவதற்கு அவர் வரவில்லை என்று ரமாபாரதி சொன்னார்.

நாங்கள் எங்கள் தாயாருக்கு தொடர்ந்து ஆறுதல் கூறி தேற்றி வருகிறோம். துயரிலிருந்து மீண்டும் வாழ்க்கையை நடத்திதான் ஆக வேண்டியுள்ளது. அதற்கு பணமும் தேவைப்படுகிறது. அந்த நிலச்சரிவில் எங்கள் கார் பலத்த சேதமடைந்த காரணத்தால் இந்த நிதியை வாங்குவதற்கு கூட வாடகைக் காரில்தான் நாங்கள் வந்தோம் என்றார் அவர்.

இதனிடையே, மண்சரிவில் பாதிக்கப்பட்ட தாமான் புக்கிட் பெர்மாய் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் உதவி நல்கிய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குடியிருப்பாளர்களில் ஒருவரான நோராஸ்மி முகமது யூசுப் (வயது 52) கூறினார்.


Pengarang :