ANTARABANGSAECONOMY

கம்போடியாவில் சிக்கிக் கொண்ட மலேசியர்களில் எஞ்சிய நால்வர் தாயகம் திரும்பினர்

கோலாலம்பூர், ஏப் 20- கம்போடியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறிய கும்பலை நம்பி அந்நாட்டிற்குச் சென்று ஏமாந்து போன 16 மலேசியர்களில் எஞ்சியிருந்த நால்வர் நேற்று தாயகம் திரும்பினர்.

அந்த நால்வரும் நேற்று மாலை 4.35 மணியளவில் நோம் பென் நகரிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்து சேர்ந்ததாக வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.

அந்நாட்டில் சிக்கிக் கொண்ட இதர 12 பேரும் இம்மாதம் 11 ஆம் தேதி நாட்டிற்கு திரும்பிய நிலையில் கோவிட்-19 நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக மற்ற நால்வரும் அங்கேயே தங்க வைக்கப்பட்டதாக அமைச்சின் பேஸ்புக் பக்கம் வாயிலாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கை தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட அந்த 12 பேரும் பத்திரமாக நாடு திரும்புவதை உறுதி செய்வதில் பெரிதும் துணை புரிந்த கம்போடிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டிலுள்ள மலேசிய  தூதருக்கும் வெளியுறவு அமைச்சு நன்றி தெரிவித்துக் கொண்டது.

மோசடிக் கும்பலின் வலையில் சிக்காமலிருக்க இத்தகைய வேலை வாய்ப்புகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி மலேசியர்களை அந்த அமைச்சு கேட்டுக் கொண்டது.


Pengarang :