MEDIA STATEMENT

குடிநுழைவுத் துறை தடுப்பு முகாமிலிருந்து தப்பிய ஆறு கைதிகள் சாலை விபத்தில் உயிரிழந்தனர்

நிபோல் திபால், ஏப் 20– குடிநுழைவுத் துறையின் சுங்கை பாக்காப் தடுப்புக் காவல் முகாமிலிருந்து தப்பிய 528 ரோஹிங்கியா தடுப்புக் கைதிகளில் அறுவர் சாலை விபத்தில் பலியாகினர்.

அந்த அறுவரும் ஜாவி நகர் அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தைக் கடக்க முயன்ற போது அவர்கள் வாகனங்களில் மோதுண்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது சுஹாய்லி முகமது ஜைன் கூறினார்.

அதிகாலை 6.50 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் இரு ஆண்கள், இரு பெண்கள், ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் உயிரிழந்தனர் என்று அவர் தெரிவித்தார்.

தங்கள் சகாக்கள் அறுவர் வாகனங்களில் மோதுண்டதைக் கண்ட எஞ்சிய 229 கைதிகள் நெடுஞ்சாலையை கடக்கும் முயற்சியை கைவிட்டு எங்கு செல்வதென்று தெரியாத நிலையில் சாலையோரமாக நடந்து சென்றனர் என்று அவர் சொன்னார்.

கைதிகள் தப்பியோடியதைக் கண்ட பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததோடு அவர்களை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

மொத்தம் 528 கைதிகள் அதிகாலை 4.30 மணியளவில்  அந்த தடுப்புக் காவல் மையத்திலிருந்து தப்பியதாக அவர் சம்பவ இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் தெரிவித்தார்.


Pengarang :