ECONOMYSELANGOR

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பஸ் டிக்கெட் விற்பனை சூடு பிடிக்கிறது

ஷா ஆலம், ஏப் 20– எண்டமிக் எனப்படும் குறுந்தொற்று கட்டத்தில் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு இன்னும் இரு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் தீபகற்ப மலேசியாவில் அனைத்து தடங்களுக்குமான விரைவு பஸ் டிக்கெட் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கிழக்குக் கரை மாநிலங்களுக்கான பஸ் டிக்கெட் முன்கூட்டியே விற்று முடிந்து விட்டது பெர்னாமா செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது. பெருநாள் காலத்திற்கான டிக்கெட் விற்பனை கடந்த ஏப்ரல் முதல் தேதி தொடங்கிய நிலையில் கிளந்தான் மாநிலத்திற்கான டிக்கெட் அனைத்தும் முதல் வாரத்திலேயே விற்கப்பட்டு விட்டன.

இன்று வரை 11,392 பஸ் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக கூறிய ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் பொது உறவு மற்றும் வர்த்தகப் பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது, பெரும்பாலான பயணிகள் கடைசி நேரத்தில் டிக்கெட் வாங்குவதை தவிர்க்க விரும்புவது போல் தோன்றுகிறது என்றார்.

கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு பஸ் சேவைக்கான டிக்கெட் விற்பனை அமோகமாக உள்ளது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக கடந்தாண்டில் பயண நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன என்றார் அவர்.

பஸ் பயணிகளில் 45 விழுக்காட்டினர் இணையம் வாயிலாக டிக்கெட்டுகளை வாங்குவதாக கூறிய அவர், இவ்வாரம் தொடங்கி டிக்கெட் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.


Pengarang :