MEDIA STATEMENT

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட மூவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்

பாசீர் கூடாங், ஏப் 23- மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில் மூன்று இளையோர் உயிரிழந்ததோடு ஒருவர் படுகாயங்களுக்குள்ளானார்.
இச்சம்பவம் மாசாய், தாமான் கோத்தா, ஜாலான் டெலிமாவில் நேற்றிரவு 10.30 மணியளவில் நிகழ்ந்தது.

இவ்விபத்தில் 15 மற்றும் 16 வயது வயதுடைய மூவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த வேளையில் 17 வயதுடைய மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த தாக ஸ்ரீ ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சுஹாய்மி இஷாக் கூறினார்.

அந்த இளையோர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த போது அந்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று உரசிக் கொண்டு விபத்துக்குள்ளானதாக அவர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கியெறியப்பட்ட அவர்கள் சாலையோரம் உள்ள கற்கள் மீது விழுந்தனர் என்று அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பில் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 41(1) வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் குறிப்பாக பதின்ம வயதினரின் நடவடிக்கைகளை அணுக்கமாக கண்காணிக்க வேண்டும் என்பதோடு இத்தகைய சட்டவிரோத பந்தயங்களில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை கொடுக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.


Pengarang :