ECONOMYNATIONAL

பெருநாள் காலத்தில் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதில் போலீசார் தீவிரம்

கோலாலம்பூர், ஏப் 27- பொது முடக்கம் காரணமாக கடந்த ஈராண்டுகளாக யாரும் பெருநாள் காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் இருந்த நிலையில் இவ்வாண்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு நோன்புப் பெருநாளை குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்ல மாநகர் வாசிகள் தயாராகி வருகின்றனர்.

இதன் காரணமாக இன்னும் சில தினங்களில் நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளில் வாகன எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோன்புப் பெருநாளுக்கு மூன்று தினங்கள் முன்னதாக நாடு முழுவதும் உள்ள சாலைகளை 1 கோடியே 40 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கூறுகிறது.

சாலைகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்கும் விபத்துகளைத் தடுப்பதற்கும் எதுவாக 18 வது ஓப்ஸ் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கத்தை காவல் துறையினர்  வரும் 29 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை மேற்கொள்ளவுள்ளனர்.

சாலைகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்து விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக ஒருங்கிணைந்த மற்றும் ஆக்கப்பூர்வமான அமலாக்க நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாக புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் முதன்மை உதவி இயக்குநர் சூப்ரிண்டெண்டன் டாக்டர் பக்ரி ஜைனால் அபிடின் கூறினார்.

இந்த பாதுகாப்பு இயக்கத்தின் போது வேகக் கட்டுப்பாட்டைக் கண்காணிக்கும் அதே வேளையில் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக விளங்கும் மோட்டார் சைக்கிள் மற்றும் லோரிகள் மீது கவனம் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அல்லது விபத்துகள் ஏற்படும் பட்சத்தில்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தக்க உதவிகளை வழங்குவர் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :