ECONOMYSELANGOR

சுங்கை துவா தொகுதியில் 450 பேர் நோன்புப் பெருநாள் பற்றுச் சீட்டு பெற்றனர்

கோம்பாக், ஏப் 30- நோன்புப் பெருநாளை முன்னிட்டு சுங்கை துவா தொகுதியிலுள்ள 450 குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களுக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

சம்பந்தப்பட்டவர்கள் அந்த 100 வெள்ளி மதிப்பிலான பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தி இங்குள்ள ஸ்ரீ தெர்னாக் பேரங்காடியில் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சுங்கை துவா தொகுதிக்கான மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் ரஹிம் அகமது காஸ்டி கூறினார்.

இந்த பற்றுச் சீட்டுகளை வழங்கும் பணி கடந்த இரு வாரங்களாக மேற்கொள்ளப்பட்டது. இதில் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் மாற்றுத் திறனாளிகள், சிலாங்கூர் அன்னையர் பரிவுத் திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் நட்புறவு உதவித் திட்ட உறுப்பினர்களாக அல்லாதவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்று அவர் சொன்னார்.

மாநில அரசின் திட்டங்களின் வாயிலாக அனைத்து மக்களும் பயன்பெற வேண்டும் என்பதே எங்களின் இலக்காகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இங்குள்ள ஸ்ரீ கோம்பாக், டேவான் பிரிங்கினில் 500 பேருக்கு உதவிப் பொருள்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு 100 வெள்ளி மதிப்பிலான பொருள்கள் வாங்குவதற்கான பற்றுச் சீட்டுகளை குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு வழங்குவதற்கு மாநில அரசு இவ்வாண்டு 33 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 33,400 பேர் பயனடைந்துள்ளனர்.


Pengarang :