ECONOMYMEDIA STATEMENT

எல்லா தொழிலாளர்களும் பயனடைய அடிப்படை ஊதியத்தில் துண்டுவிழும் தொகையை அரசாங்கம் ஈடுகட்ட வேண்டும்  

புத்ராஜெயா, – மே 1- இன்று – மே 1-ம் தேதி முதல் RM1,500 குறைந்தபட்ச ஊதிய விகிதம் அமலுக்கு வரும்போது, முறைசாரா துறை உட்படப் பல வேலைவாய்ப்புத் துறைகளுக்கு நெகிழ்வுத்தன்மை அளிக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

சட்டம் 732 படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறது. அதைச் செய்யாவிட்டால், சட்டத்தை மீறியதாக மக்கள் அவரை விமர்சிப்பார்கள், ”என்கிறார்.

இப்படிக் கூறிவிட்டு சில துறைகளுக்கு நெகிழ்வு தன்மை என்ற போர்வையில் சில  தொழில்களுக்கு  அடிப்படை சம்பளத்தை அவரே மறுப்பதேன்?  என்று  கெஅடிலான்  தேசிய இளைஞர் பகுதி அறிய விரும்புவதாக அதன் தேசிய உதவித்தலைவர்  ஜெஸ்தின் ராஜ் கேட்டார்.

நாடு சுதந்திரமடைந்து 65 ஆண்டுகள் ஆன போதிலும், தோட்டத் தொழிலாளரிடையே ஏழ்மையை ஒழிக்க முடியாததிலிருந்து  தொழிலாளர் அமைச்சரும்,  ம.இ.காவும்  அதன் தலைவர்களும், அரசாங்கமும் இன்னும்  போதிய பாடம் படிக்கவில்லை என்பதை  அமைச்சரின் அறிக்கை மக்களுக்கு  உணர்த்துகிறது என்றார்  அவர்.

பாரிசான்  ஆட்சியில் நீண்டகாலமாக தோட்டத் தொழிலாளர்கள் தேசிய வளர்ச்சி மற்றும் ஊதிய திட்டங்களிலிருந்து  ஒதுக்கி வைக்கப்பட்டதின் விளைவே இந்தியச் சமுதாயத்தின் இன்றைய ஏழ்மை நிலை.

அமைச்சரின் கூற்று  நாட்டு மக்களில்  ஒரு பகுதியினரை  பொருளாதார வளர்ச்சியில் இருந்து  ஒதுக்கி வைப்பதற்கு  ஒப்பாகும்.  ஒரே நாட்டில்  இரு வீதக் கொள்கை  இரு வித நீதி என்பது பாரிசானின் சித்தாந்தம் என்பதனைக் கண்டு வருகிறோம்.

அந்த மாதிரி இரட்டை வேடம், நாட்டு மக்களை மட்டும் ஏழையாக்கவில்லை, நாடே ஏழையாகி விட்டது. சில சிறு தொழில்களை வாழ வைக்கப் பல ஆயிரம் தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பது எப்படி நியாயமாகும்.

மீண்டும் ஒரு பாகுபாடான பொருளாதாரத் திட்டமா? நாடு தாங்குமா?  அடிப்படை சம்பளம் என்பதன் அர்த்தம் தெரியாமல்  அமைச்சர் அறிக்கை விடுவது அதை விட கேவலம் என்றார்  அவர்.

அடிப்படை  ஊதியமாக  ரி.ம1500யை நிர்ணயித்தது  அரசாங்கம். உயர்ந்து வரும் விலைவாசிகள்  மற்றும்  இன்றைய வாழ்க்கை சூழலைச் சமாளிக்க மிக-மிக அவசியமான ஒரு தொகை அது, என்பதால்  அரசாங்கம்  அத்திட்டத்தை  ஏற்றுக்கொண்டது. பாட்டாளிகளின் சாப்பாடு தட்டில் குறைந்த அளவிலான உணவாவது இருப்பதை உறுதி  செய்வதே  இதன் நோக்கம். அதிலுமா பாகுபாடு?

ஆனால்,  ஒரு பிரிவினருக்கு அடிப்படை சம்பளம் வழங்கி விட்டு மற்றவர்களுக்கு நாமம் போடுவது எப்படி தேசிய அடிப்படை   ஊதியம் ஆகும்?

முதல் ஆண்டு  தொழிலாளர்களின் அடிப்படை  சம்பளம் 1500 கொடுக்க முடியாத ஒரு நிறுவனம் மறு ஆண்டு கொடுக்குமா ? அதற்கு என்ன உத்தரவாதம்? என்று கேட்டார்  ஜெஸ்தின் ராஜ்

இப்படிப்பட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களை ஏமாற்ற அமைச்சர்  உடந்தையாக இருக்கக் கூடாது. தொழிலாளர்கள் உழைப்புக்கு ஊதியம்  வழங்க முடியாத நிறுவனங்கள்  செயல்படுவதில் எவருக்கு என்ன இலாபம்.

அதனால் அரசாங்கத்துக்கு அனுகூலம் என்றால், தொழிலாளர்களுக்கான பாக்கி ஊதியத்தை அரசாங்கமே வழங்க வேண்டும்.

முன்னால் பிரதமர் நஜிப்பின் தவறான பொருளாதாரச் சுருட்டல் கொள்கையால் ஓன் எம்டிபி போன்ற பல முறைகேடுகளில்  நாடு பில்லியன் கணக்கான வெள்ளிகளை இழந்துள்ள வேளையில்.

ஏன் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக ஆண்டுக்கு 5 பில்லியனை அரசு ஒதுக்கக் கூடாது?

சுமார் 1.2 மில்லியன் தொழிலாளர்களுக்கு மாதம் 350 வெள்ளி ஊதிய உதவியாக வழங்கினால் கூட 10 ஆண்டுகளுக்குப் பாவப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப் போதுமான தொகை 50 பில்லியன்.

அவ்வளவு பெரிய தொகையை சர்வசாதாரணமாக கடலில் கரைத்த பாரிசான் நேஷனல் அரசாங்கத்தின் பங்காளியான ம,இ,கா சரவணன், துண்டுவிழும் ஊதியத்தை  அரசாங்கமே  பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு வழங்க அமைச்சரவையில் குரல் கொடுக்க வேண்டும், உழைக்கும் வர்க்கத்தின் வயிற்றில் அடிக்கக்கூடாது என்றார் கெஅடிலான்  தேசிய இளைஞர் பகுதி உதவித் தலைவர் ஜெஸ்தின் ராஜ்.


Pengarang :