ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சீ விளையாட்டு: 36-தங்கப் பதக்க இலக்கை அடைய முடியும் என்று அமைச்சர் கூறுகிறார்

ஈப்போ, மே 3 – வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெறும் 31வது சீ விளையாட்டுப் போட்டியில், தடகள வீரர்களின் மன உறுதியின் அடிப்படையில் மலேசியாவால் 36 தங்கப் பதக்க இலக்கை எட்ட முடியும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ அகமது பைசல் அசுமு நம்பிக்கை தெரிவித்தார்.

“எங்கள் விளையாட்டு வீரர்கள் வழக்கமாகக் கவனம் செலுத்தும் விளையாட்டுகள் இந்த முறை ஹனோயில் இடம் பெறாது, இதன் விளைவாக எங்கள் விளையாட்டு வீரர்களுக்கு அதிகடியான பதக்க இலக்கை அமைக்க முடியாது.

“இது இரண்டு ஆண்டுகளாகக் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாகச் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் இல்லாததால், எங்கள் விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மதிப்பிட அதிகப் பதக்க இலக்கை நிர்ணயிக்க முடியாது,” என்று அவர் இன்று அவரது இல்லத்தில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.

மே 12 முதல் மே 23 வரை நடைபெறவுள்ள இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் இலக்கு 36 தங்கம், 35 வெள்ளி மற்றும் 75 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 146 பதக்கங்கள் ஆகும்.

ரமலான் மாதத்தில் இரவு நேரப் பயிற்சியில் ஈடுபட்ட 584 தேசிய விளையாட்டு வீரர்கள் காட்டிய தியாகம் மற்றும் அர்ப்பணிப்பால் அகமது பைசல் ஈர்க்கப் பட்டார்.

“தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஹரி ராயா பெருநாள் கொண்டாடுவதைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தாலும், சீ விளையாட்டுகளில் தங்களால் முடிந்ததைச் செய்ய அவர்கள் இன்னும் கவனம் செலுத்தினர்,” என்று அவர் கூறினார்.

தற்போதைய செயல்திறனின் அடிப்படையில், 15 விளையாட்டுகள் 36 தங்கப் பதக்கங்களுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளன, ஹனோய் போட்டியில் நீச்சல் மற்றும் தடகள விளையாட்டுகள் தேசிய அணிக்குத் தங்கப் பதக்கம் குவிக்கும் களமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஒவ்வொரு விளையாட்டிலும் ஐந்து தங்கப் பதக்கங்களுக்கு மேல் பெறுவதற்குரிய வாய்ப்பு உள்ளது.

1959 ஆம் ஆண்டு பாங்காக்கில் துவங்கப்பட்ட சீ விளையாட்டுப் போட்டி வரலாற்றில், 145 தங்கம், 92 வெள்ளிகள் மற்றும் 86 வெங்கலங்களுடன் 2017 ஆம் ஆண்டு மலேசியா சிறந்த சாதனை படைத்து, கோலாலம்பூரில் நடைபெற்ற போட்டியின் ஒட்டுமொத்தச் சாம்பியன் ஆனது என்றார் அவர்.

கடந்த 2019 பிலிப்பைன்ஸில் நடந்த போட்டியில் 55-58-71 பதக்கங்களுடன் தாயகம் திரும்பியது, அந்த ஆண்டு தேசிய அணி 70 தங்கப் பதக்கங்களின் இலக்கை அடையத் தவறிவிட்டது.

 


Pengarang :