ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் டிங்கி, கை,கால்,வாய்ப்புண் நோய் அதிகரிப்பு

புத்ரா ஜெயா, மே 6- நாட்டில் டிங்கி மற்றும் கை,கால்,வாய்ப்புண் நோய் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

பதினாறாவது நோய்த் தொற்று வாரத்தில் ( 16/2022)   967 ஆக இருந்த டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை  17வது நோய்த் தொற்று வாரத்தில் 1,021 ஆக உயர்வு கண்டுள்ளதாக 17/2022 இல் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 24 முதல் 30 வரை டிங்கி 54 சம்பவங்கள்  (5.6 விழுக்காடு) அதிகரித்து அந்நோய் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,942 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த  2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 9,270 சம்பவங்கள் அதிகமாகும் என அவர் சொன்னார்.

பதினேழாவது நோய்த் தொற்று வாரம் வரையிலான காலக் கட்டத்தில் டிங்கி காய்ச்சலால் ஏழு மரணங்கள் நிகழ்ந்துள்ளன  என்று அவர்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நாட்டில் கை, கால் மற்றும் வாய் நோய்ப் புண் நோயின் எண்ணிக்கையும்  கடுமையான அதிகரிப்பைக் கண்டறிந்துள்ளதாக  குறிப்பிட்ட அவர், 17 வது நோய்த் தொற்று வாரம் வரை வரை நாடு முழுவதும் மொத்தம் 22,463 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றார்.

2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 12.8 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அப்போது 1,752 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்ததாகவும் அவர் கூறினார்.

கை,கால்,வாய்ப்புண் நோய் பெரும்பாலும் 6 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகளையே பெரிதும் பாதிக்கிறது. அப்பிரிவினர் சம்பந்தப்பட்ட 21,508 சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து  ஏழு முதல் 12 வயது வரையிலான 729 சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியோர் 12 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.


Pengarang :