ECONOMY

நோன்புப் பெருநாள் பாதுகாப்பு இயக்கம்- 8,000 குற்றப்பதிவுகளை ஜே.பி.ஜே. வெளியிட்டது

கெந்திங் ஹைலண்ட்ஸ், மே 6– 2022 ஆம் ஆண்டிற்கான நோன்புப் பெருநாள் சாலைப் பாதுகாப்பு இயக்கத்தின் போது நாடு முழுவதும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக 8,036 குற்றப்பதிவுகளை சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி இவ்வியக்கம் தொடங்கியது முதல் 44,737 வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேற்கண்ட  வாகனங்களுக்கு குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டதாக சாலை போக்குவரத்து இலாகாவின் அமலாக்கப் பிரிவு முதன்மை இயக்குநர் டத்தோ லோக்மான் ஜமஹான் கூறினார்.

சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கும்படி வாகனமோட்டிகளை சாலை போக்குவரத்து இலாகா வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும் பல வாகனமோட்டிகள் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டுவதை இந்த எண்ணிக்கை காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பாதுகாப்பு இயக்கம் வரும் வரும் மே மாதம் 8 ஆம் தேதி முடிவடையும் நிலையில் எஞ்சியுள்ள ஓரிரு தினங்களில் சாலைக் குற்றங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஏதுவாக வாகனமோட்டிகள் கவனமாக சாலையைப் பயன்படுத்துவர் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

இங்குள்ள கெந்திங் ஹைலண்ட்ஸ் பஸ் முனையத்தில் சிறப்பு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த பஸ் முனையத்தில் ஜே.பி.ஜே.வின் தொழில்நுட்பக் குழு 11 பஸ்கள் மீது மேற்கொண்ட சோதனையில் அனைத்து பஸ்களும் நல்ல முறையில் பராமரிக்கப்படுவதை கண்டறிந்ததாக அவர் சொன்னார்.


Pengarang :