ECONOMYHEALTHNATIONAL

கடுமையான ஹெப்படைடிஸ் நோய் மீது சுகாதார அமைச்சு தீவிர சோதனை 

கோலாலம்பூர், மே 6- சிகிச்சைக்கு வரும் ஒரு மாதம் முதல் குழந்தை முதல் 18 வயது வரையிலான இளையோர் வரை மஞ்சள் காமாலை மற்றும் கடுமையான ஹெப்படைடிஸ் நோய்க்கான அறிகுறியைக் கொண்டிருக்கும் பட்சத்தில் மேல் சிகிச்சைக்காக அவர்களை உடனடியாக அரசாங்க மருத்துவமனைக்கு அனுப்பும்படி சுகாதார மையம் அல்லது தனியார் கிளினிக்குகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பசியின்மை, குமட்டல், சோர்வு மற்றும் கருமையான நிறத்தில் சிறுநீர் கழித்தல் போன்றவை ஹெப்படைடிஸ் நோய்க்கான இதர அறிகுறிகளாகும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறைகளைப் பயன்படுத்தி அனைத்து பொது சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் கடுமையான ஹெப்படைடிஸ் நோய்க்கான கண்காணிப்பை சுகாதார அமைச்சு தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடுமையான ஹெப்படைடிஸ் நோய் தொடர்பான அறியப்படாத ஆய்வியல் குறிப்பு மற்றும் மேலாண்மை நெறிமுறைகளை அமைச்சு உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அறியப்படாத காரணங்களால் சிறார்கள் மத்தியில் பரவும் கடுமையான ஹெப்படைடிஸ் சம்பவங்களை சுகாதார அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதோடு அதன் ஆகக்கடைசி நிலவரங்கள் குறித்து அது அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வருகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

சபாவிலுள்ள 4 வயது 11 மாதச் பாலகன் ஒருவன் கடுமையான ஹெப்படைடிஸ் நோய்க்காக சபாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த மாதம் சிகிச்சைப் பெற்றது அந்த தீவிர கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் கண்டறியப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :