ANTARABANGSAECONOMY

சட்டவிரோத மீன்படி நடவடிக்கைக்காக ஆள்கடத்தல்- எழுவரை தாய்லாந்து போலீசார் கைது செய்தனர்

பேங்காக், மே 6- மலேசிய கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்காக தாய்லாந்து பிரஜைகளைக் கடத்தியதன் பேரில் எழுவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மலேசியாவிலிருந்து வந்ததாக நம்பப்படும் மீன்பிடி கப்பலில் இருந்த 44 தாய்லாந்து தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது அவர்களில் மூவர் ஆள் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த எழுவரும் கைது செய்யப்பட்டதாக அரச தாய்லாந்து காவல்துறையின் மத்திய புலனாய்வு மையத்தின் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு துணை ஆணையர் நாரோங் தெஸ்விபூன் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் அந்த மீன்பிடி கப்பலின் உரிமையாளர், மாலுமி மற்றும் மீன்பிடித் தொழிலில் தாய்லாந்து பிரஜைகளை ஈடுபடுத்தியதாக நம்பப்படும் ஐந்து இடைத்தரகர்கள் ஆகியோரும் அடங்குவர் என்று அவர் தெரிவித்தார்.

அந்த தொழிலாளர்கள் மிகச் சொற்ப சம்பளத்தில் அதிக நேரம் மிகவும் கடுமையாக வேலை செய்யப் பணிக்கப்பட்டதோடு அவர்கள் உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

அந்த ஊழியர்களுக்கு சம்பளம் என்று எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக அன்றாடத் தேவைக்கான பொருள்களை வாங்குவதற்கு மாதம் 100 வெள்ளி மட்டும் அலவன்சாக வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :