ECONOMYMEDIA STATEMENTNATIONAL

“பிக்கிட்ஸ்“ திட்டம் 15 ஆம் தேதி நிறுத்தப்படுகிறது- சிறார்களுக்கு விரைந்து தடுப்பூசி பெற கைரி வலியுறுத்து

கோலாலம்பூர், மே 8- “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் வரும் மே 15 ஆம் தேதியுடன் நிறுத்தப்படவுள்ள நிலையில் எஞ்சியுள்ள எட்டு நாட்களில் தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி பெறுமாறு சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோவிட்-19 நோய்த் தொற்றினால் சிறார்களுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி விரைந்து கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

இதுவரை சுமார் 15 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளது நிரூபணமாகியுள்ளது என தனது டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நேற்று வரை 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 43.4 விழுக்காட்டினர் அல்லது 15 லட்சத்து 42 ஆயிரத்து 513 பேர் குறைந்தது ஒரு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாகார அமைச்சின்  கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

அவர்களில் 894,826 பேர் அல்லது 25.2 விழுக்காட்டினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 28 லட்சத்து 96 ஆயிரத்து 056 பேர் அல்லது 93.1 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் மேலும் 29 லட்சத்து 93 ஆயிரத்து 641 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சிறார்களுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியைத் செலுத்துவது வரும் மே 15 ஆம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக சிறார்களுக்கான கோவிட்-19 தடுப்பூசித் திட்ட நடவடிக்கைக் குழு அண்மையில் அறிவித்திருந்தது.

குறைவான வரவேற்பு காரணமாக இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் வீணாவதை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அது தெரிவித்திருந்தது.

மே 15 ஆம் தேதிக்குப் பிறகு செலுத்தப்படும் தடுப்பூசிக்கு கட்டணம் விதிக்கப்படும் அதே வேளையில் சினோவேக் தடுப்பூசி மட்டும் இத்திட்டத்தில் வழங்கப்படும்.

 


Pengarang :