ECONOMYNATIONALSELANGOR

மோரிப் தொகுதி ஏற்பாட்டிலான சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் 500 பேர் பங்கேற்றனர்

கோல லங்காட், மே 8- இங்குள்ள மோரிப் சதுக்கத்தில் நேற்றிரவு நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலைநிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் இந்தியர்கள் மட்டுமின்றி அனைத்து இன மக்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக மோரிப் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின் கூறினார்.

இந்துக்களின் புத்தாண்டைக் கொண்டாடும் அதே வேளையில் பல்லின மக்களிடையே அணுக்கமான நட்புறவை வளர்க்கும் நோக்கில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

நாம் வழக்கமாக தீபாவளி, மால் ஹிஜ்ரா போன்ற பண்டிகைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தமிழர்களின் வருடப் பிறப்பான சித்திரை புத்தாண்டு பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் உள்ளிட்ட பிரமுகர்களும் இந்த சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த புத்தாண்டு நிகழ்வுக்கு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த மோரிப் சட்டமன்ற உறுப்பினருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான திருமதி ஜி, உமாதேவி (வயது 46) கூறினார்.

இந்திய சமூகத்திற்காக பிரத்தியேகமாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற நிகழ்வுகளை வரும் ஆண்டுகளிலும் அவர் நடத்துவார் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் சொன்னார்.

சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு வருடந்தோறும் ஏப்ரல் மாத மத்தியில் பல்வேறு நிகழ்வுகளுடன் வெகு விமரிசையாக நடத்தப்படும் என்று திருமதி பி. நிறைமதி (வயது 35) தெரிவித்தார்.


Pengarang :