ECONOMYNATIONAL

அரசியல் தலையீட்டிலிருந்து நீதித் துறையின் சுதந்திரத்தைக் காப்போம்- அன்வார் வலியுறுத்து

ஷா ஆலம், மே 9- அரசியல் தலையீட்டிலிருந்து நீதித் துறையின் சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

சில நீதிமன்றத் தீர்ப்புகள் நடப்புத் தலைவர்களுக்கு சாதகமாக இல்லாது போகும் சமயங்களில் நீதித்துறையின் சுதந்திரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக அவர் சொன்னார்.

சில நீதிபதிகள் அரசியல் தலைவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அல்லாமல்  மிகத் துணிச்சலாக அவர்களுக்கு தண்டனை வழங்குகின்றனர்.  முன்பு இத்தகைய தீர்ப்புகள் குறித்து பழைய கட்சியால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இப்போது நீதித் துறையின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

எஞ்சியிருக்கும் அரசியல் ஆதிக்கத்திலிருந்தும் கொடுங்கோன்மையிலிருந்தும் நீதித் துறை முற்றிலும் விடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நேற்று இங்கு நடைபெற்ற “ஒருமித்த கருத்து, இளம் தலைமுறையின் வாரிசு“ எனும் தலைப்பிலான கெஅடிலான் மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்திய போது அவர் அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள், சமூக விமர்சகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகிய தரப்பினர் நீண்ட காலமாகவே நீதித் துறையின் சுதந்திரத்திற்காக போராடி வருவதாக அன்வார் தனதுரையில் கூறினார்.


Pengarang :