ECONOMYHEALTHSELANGOR

முதன் முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை- வரலாறு படைத்தது காஜாங் மருத்துவமனை

ஷா ஆலம், மே 10- உடல் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சையை நேற்று வெற்றிகரமாக மேற்கொண்டதன் மூலம் காஜாங் மருத்துவமனை வரலாறு படைத்துள்ளது.

இந்த வரலாற்றுப்பூர்வ சாதனையை சுகாதார அமைச்சு பெரிதும் பாராட்டியுள்ளதோடு சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லாவும் அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

காஜாங் மருத்துவமனையைப் பொறுத்த வரை 8-5-2022 ஆம் தேதி ஒரு வரலாற்றுப்பூர்வ தினமாகும். உடல் உறுப்பு நன்கொடை நடைமுறையை அது வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது என நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.

இந்த அறுவை சிகிச்சை வெற்றியடைவதில் பங்காற்றிய திசு மற்றும் உடல் உறுப்பு கொள்முதல் குழு, மயக்க மருந்தியல் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, மருத்துவத் துறை, உடற்கூறு துறை, கதிரியக்கப் பிரிவு, காஜாங் மருத்துவமனையின் அவசரப் பிரிவு, தடயவியல் பிரிவு, கோலாலம்பூர் மருத்துவமனையின் சிறுநீரக  சிகிச்சைப் பிரிவு நிபுணர்கள் ஆகிய தரப்பினருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

உடல் உறுப்பை தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கும் நோர் ஹிஷாம் தனது நன்றியைப் புலப்படுத்திக் கொண்டார். உடல் உறுப்பு செயலிழப்பால் அவதியுறும் ஒருவருக்கு உதவக்கூடிய இந்த உறுப்பு தானம் கிடைப்பதற்கரிய ஒரு வாழ்நாள் பரிசாகும் என அவர் வர்ணித்தார்.

நாட்டில் 4,600 நோயாளிகள் உடல் உறுப்பு தானத்திற்காக காத்திருப்பதை ஆக சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன.

இறந்தவர்கள் மற்றும் உயிருடன் இருப்பவர்களிடமிருந்து பெறப்பட்ட உடல் உறுப்புகள் மூலம் இதுவரை 2,624 நோயாளிகள் பலன் பெற்றுள்ளனர்.


Pengarang :