ECONOMYSELANGOR

தீ விபத்தில் வீடிழந்தவர்களுக்கு வாடகை வீடு பெற்றுத் தர மந்திரி புசார் முயற்சி

ஷா ஆலம், மே 10- பத்து கேவ்ஸ், கம்போங் பாஹ்தெராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீயில் குடியிருப்பை இழந்த இரு குடும்பங்களின் அவல நிலையை மந்திரி புசார் பரிவுடன் கவனிக்கத் தொடங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட அவ்விரு குடும்பங்களுக்கும் வாடகை வீட்டைப் பெற்றுத் தருவதற்கான முயற்சியில் சட்டமன்ற சேவை மையம் ஈடுபட்டு வருவதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம், தீயினால் சேதமடைந்த வீடுகளைச் சரி செய்வதற்காக தமது தரப்பு நிதி ஒதுக்கீடு  செய்துள்ளதாக அவர் சொன்னார்.

நான் சபாவிலிருந்து வந்தவுடன் நேராக கம்போங் பாஹ்தெராவுக்குச் சென்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தேன்.

அவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்கியதோடு சேதமடைந்த வீடுகளை சரி செய்யும் வரை தொகுதி சேவை மையம் வாயிலாக வாடகை வீடுகளில் அவர்கள் தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறேன் என்றார் அவர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.13 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில்  அவ்விரு வீடுகளும் 80 விழுக்காடு சேதமடைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது.


Pengarang :