ANTARABANGSAECONOMY

எச்சரிக்கையுடன் இருப்பீர்! – இலங்கையிலுள்ள மலேசியர்களுக்கு அறிவுறுத்து

கோலாலம்பூர், மே 11- இலங்கையில் தங்கியிருக்கும் மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டிலுள்ள மலேசிய  தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அந்த தீவு நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை அங்குள்ள மலேசியர்கள் கருத்தில் கொள்ளும் அதேவேளையில் எப்போதும் அந்நாட்டுச் சட்டதிட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் நினைவுறுத்தியது.

ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள  நடப்புச் சூழலில் அங்குள்ள மலேசியர்கள் தங்கள் இருப்பிடத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்று மின்னஞ்சல் வாயிலாக பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டியில் அத்தூதரகம் கூறியது.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள மலேசியர்கள் அங்கு ஊரடங்கு அகற்றப்படும் வரை தங்கள் பயணத் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும். இலங்கையில் நுழையும் போது ஏற்படக்கூடிய தேவையற்ற அசௌகரியங்களை தவிர்ப்பதற்கு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமாகிறது என அது தெரிவித்தது.

இலங்கையில் இருக்கும் 85 மலேசியர்கள் கொழும்பு நகரில் உள்ள மலேசிய தூதரகத்தில் பதிந்து கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் அங்கு வேலை செய்வோர் அல்லது அந்நாட்டினரை மணம் புரிந்து கொண்டவர்களாவர். அவர்களில் கணிசமான எண்ணிக்கையிலானோர் கொழும்புவில் தங்கியுள்ளனர் என தூதரகம் குறிப்பிட்டது.

இலங்கையில் தங்கியுள்ள மலேசியர்கள் தூதரகத்துடன் எளிதில் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக வாட்ஸ்ஆப் புலனக் குழு உருவாக்கப்பட்டுள்ளதோடு பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களின் தொடர்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


Pengarang :