ECONOMYNATIONAL

சப்புரா நிறுவனத்தை மீட்க பெட்ரோனாஸ் பணம்- நஜிப்பின் பரிந்துரையை அன்வார் நிராகரித்தார்

ஷா ஆலம், மே 13– நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் சப்புரா எனர்ஜி பெர்ஹாட் நிறுவனத்தை இழப்பிலிருந்து மீட்க பெட்ரோனாஸ் பணத்தைப் பயன்படுத்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் முன் வைத்த பரிந்துரையை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்துள்ளார்.

அரசாங்க சார்பு நிறுவனம் என்ற முறையில் பெட்ரானாஸூம் நாட்டு மக்களுக்குச் சொந்தமான என்பதை எதிர்க்கட்சித் தலைவருமான அன்வார் நஜிப்பிற்கு நினைவுறுத்தினார்.

நேற்றிரவு இங்கு நடைபெற்ற பொது விவாதத்தின் போது அவர் இதனைக் கூறினார். இந்த விவாதம் பல்வேறு ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பிரச்சனைகள் எழும்போதெல்லாம் ஒரு காசுகூட அரசாங்கப் பணம் பயன்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுவதை நான் பல முறை கேட்டுள்ளேன். ஒரு காசுகூட பயன்படுத்தவில்லை எனக் கூறி விட்டு பெட்ரோனாஸ் பணத்தைக் கோடிக்கணக்கில் பயன்படுத்துகிறோம். பெட்ரோனாஸ் யாருக்குச் சொந்தமானது? அது அரசுக்குச் சொந்தமானது. அது நாட்டு மக்கள் சொத்து என்பது இது பொருளாகும் என்றார் அவர்.

முன்னதாக இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய நஜிப், சப்புரா எனர்ஜி நிறுவனத்தை ஒரு காசுகூட அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தாமல் பெட்ரோனாஸ் நிறுவனத்தின் மூலம் மீட்கலாம் என்று பரிந்துரைத்திருந்தார்.

சப்புரா எனர்ஜி நிறுவனத்தின் பிரச்னைகளுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய தடயவியல் தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று  அன்வார் வலியுறுத்தினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் அந்நிறுவனம் 250 கோடி வெள்ளி இழப்பை எதிர்நோக்கிய போது அந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியின் வருமானம் 7 கோடியே 19 லட்சம் வெள்ளியாக இருந்தது ஒரு நிறுவனத்திற்கு உதவ வேண்டுமானால் அதனை இழப்பிலிருந்து காப்பாற்றுவது சரியான வழியல்ல. மாறாக தடயவியல் தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.

உதாரணத்திற்கு பெர்வாஜா நிறுவனத்திற்கு உதவும்படி நான் பணிக்கப்பட்ட போது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி தடயவியல் தணிக்கையை மேற்கொள்ளும்படி பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் தணிக்கை நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தேன் என்று அவர் சொன்னார்.


Pengarang :