ECONOMY

கால்நடைத் தீவன உற்பத்தியில் புதிய செயல்முறை- சிலாங்கூர் அரசு அமல்படுத்தும்

ஷா ஆலம், மே 20- கால்நடைகளுக்கு, குறிப்பாக கோழிகளுக்கு மாற்றுத் தீவனம் தயாரிப்பதில் மாநில அரசு புதிய வழி முறைகளை அமல்படுத்தும் என்று விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

வெகு விரைவில் வரையறுக்கப்படவுள்ள அந்த வழி முறை கோழித் தீவனத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த  உதவும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த  புதிய முறை குறித்த ஆராய்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில்  (யு.கே.எம்.) மேற்கொள்ளப்பட்டு, கெடாவில் அமலாக்கம் காணத் தொடங்கியுள்ளது.  இந்த வழி முறையை  சிலாங்கூர் வெகு விரைவில் அமல்படுத்தும் என்று அவர் சொன்னார்..

இந்த ஒத்துழைப்பின் மூலம், தற்போது வெ.1.70 ஆக உள்ள கோழி தீவனத்தின் உற்பத்தி விலையை 70 காசாக குறைக்க முடியும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். கோழி வளர்ப்பு மட்டுமின்றி, மாடு, ஆடு போன்ற கால்நடைகளுக்கும் இந்த இத்திட்டத்தை அமல்படுத்துவோம் என்றார் அவர்.

நேற்று ஷா ஆலம் இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில்  நடந்த சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக்  கழகத்தின் (பி.கே.என்.எஸ்.) நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

மாநிலத்தில் கோழி விநியோகம் குறித்து கருத்துரைத்த இஷாம், இந்த விஷயத்தைப் பற்றி மாநில மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்தார்.

“கோழி விநியோகம் போதுமான அளவு உள்ளதால் அது குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை.   இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் விநியோகம் துண்டிக்கப்படாமல் இருக்க வேறு வழிகளைத் தேடுவோம் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :