ANTARABANGSAECONOMY

வெளிநாட்டு நிறுவனங்கள் மலேசியாவில் படப்பிடிப்பு நடத்துவதை ஊக்குவிக்க ரொக்கச் சலுகை- பினாஸ் அறிவிப்பு

கேன்ஸ், மே 20– வெளிநாட்டு சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் மலேசியாவில் படப்பிடிப்பை நடத்துவதை ஊக்குவிக்க “பிலிம் இன் மலேசியா“ ஊக்குவிப்புத் திட்டத்தின் வாயிலாக 30 விழுக்காட்டு ரொக்க கழிவு சலுகையும் ஐந்து விழுக்காடு வரையிலான கலாசார சோதனை கட்டண சலுகையும் வழங்கப்படும்.

மற்ற நாடுகளைக் காட்டிலும் மிக அதிக கட்டணக் கழிவை இந்த சலுகைத் திட்டம் கொண்டுள்ளதால் இந்த வாய்ப்பு குறித்து விரிவான அளவில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்று பினாஸ் எனப்படும் மலேசிய தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பேராசிரியர் டாக்டர் நாசீர் இப்ராஹிம் கூறினார்.

மலேசிய உயர்ந்த பட்சமாக 35 விழுக்காடு வரையிலான கட்டணக் கழிவு சலுகை வழங்குவதை வெளிநாட்டு திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் இன்னும் அறிந்திருக்கவில்லை. நமது அண்டை நாடான தாய்லாந்து கூட 25 விழுக்காட்டு கழிவை மட்டுமே வழங்குகிறது என்று அவர் சொன்னார்.

இந்த சலுகை குறித்து வெளிநாட்டு சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இது குறித்த தகவல்களை அதிகளவில் நாம் வெளியிட வேண்டும். இதன் மூலம் நமது திரைப்படத் தயாரிப்புத் துறையை மேம்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.

நமது நாட்டின் திரைப்படத் தொழில்துறைக்கு புத்துயிரூட்ட விரும்புகிறோம். இதன் அடிப்படையில் மலேசியாவில் படப்பிடிப்பை நடத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் 30 விழுக்காட்டு உள்நாட்டுப் பணியாளர்களை வேலைக்கமர்த்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளோம் என்றார் அவர்.


Pengarang :