ANTARABANGSAECONOMY

செம்பனை எண்ணெய்க்கான ஏற்றுமதி தடை நீக்கம்- இந்தோனேசிய அதிபர் அறிவிப்பு

ஜாகர்த்தா, மே 20- உள்நாட்டில் செம்பனை எண்ணைய் விநியோகம் சீரடைந்ததைத் தொடர்ந்து அந்த சமையல் பொருளை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இந்தோனேசியா வரும் மே 23 ஆம் தேதியுடன் மீட்டுக் கொள்கிறது.

செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்கான தடையை அகற்ற வேண்டும் என அத்தொழில் துறையினர் வலியுறுத்தியிருந்த நிலையில் அதிபர் ஜோக்கோ விடோடோவின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டில் செம்பனை எண்ணெய் விலை உயர்வு கண்டதைத் தொடர்ந்து கச்சா செம்பனை எண்ணெய் மற்றும் அது சார்ந்த பொருள்களின் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா கடந்த மாதம் 28 ஆம் தேதி தடை விதித்தது.

செம்பனை எண்ணெயின் மொத்த விலை லிட்டர் ஒன்றுக்கு 14,000 ரூப்பியா என்ற அளவுக்கு இன்னும் குறையாக போதிலும் அதன் விநியோகம் தேவையைவிட அதிகமாக  உள்ளதாக அதிபர் ஜோக்கோ விடோடோ நேற்று கூறியிருந்தார்.

பல பகுதிகளில் செம்பனை எண்ணெய் விலை இன்னும் அதிகமாக உள்ளதை நான் அறிவேன். அடுத்த சில வாரங்களில் இந்த சமையல் பொருளின் விலை நிலைபெறும் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

செம்பனை தொழிலில் ஈடுபட்டுள்ள 1 கோடியே 70 லட்சம் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :