ECONOMYNATIONAL

நோன்புப் பெருநாள் உபசரிப்பை சிறப்பாக நடத்திய மாவட்டத்திற்கு வெ.50,000 பரிசு- மந்திரி பெசார் அறிவிப்பு

கிள்ளான், மே 22- இவ்வாண்டு நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த மாவட்டத்தின் பெயரை மாநில அரசு வெகு விரைவில் அறிவிக்கும்.

நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட அம்சங்களை நிறைவு செய்த மாவட்ட மன்றத்திற்கு 50,000 வெள்ளி பரிசாகவும் வெகுமதியாகவும் வழங்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பிரத்தியேக கூட்டம் ஒன்றில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு வெற்றியாளர் யார் என்பதை அடுத்த வாரம்  அறிவிப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பொது உபசரிப்பை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த அனைத்து ஒன்பது மாவட்டங்களுக்கும் இந்நிகழ்வுக்கும் ஆதரவளிக்கும் விதமாக அதில் கலந்து சிறப்பித்தவர்களுக்கும் தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

நேற்றிரவு இங்குள்ள பண்டமாரான் விளையாட்டுத் மையத் தொகுதியில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புத் தொடரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெறுவதை உறுதி செய்த மாவட்ட அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினருக்கும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்துக்  கொண்டார்.

இந்த நிகழ்வுகளை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்வதில்அனைத்து அரசு துறைகளும் அணுக்கமான ஒத்துழைப்பை நல்கியது கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக தடைபட்டிருந்த நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பை மாநில அரசு இம்முறை மாவட்ட நிலையில் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை சிறப்பாக நடத்தியது.

 


Pengarang :