ECONOMYNATIONAL

ஜோப்கேர் பயணத் தொடர் மூலம் 500 பேர் வேலை வாய்ப்பு பெற்றனர்- கணபதிராவ் தகவல்

கோலாலம்பூர், மே 23– இவ்வாண்டு பிப்ரவரி மாதம்  தொடங்கப்பட்ட சிலாங்கூர் அரசின் ஜோப்கேர் வேலை வாய்ப்பு பயணத் திட்ட தொடரில் பங்கேற்றவர்களில் 500க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த வேலை வாய்ப்பு பயணத் தொடர் ஐந்தாவது கட்டத்தை எட்டியுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.

இந்த திட்டம் சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டாலும் வேலை தேடுவோருக்கு கூடுமானவரை வேலை வாய்ப்பினை பெற்றுத் தருவதில்  எங்களின் பங்கினை இயன்ற வரை ஆற்ற விரும்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தில் பங்கு கொண்டு வேலை வாய்ப்பினை வழங்கிய தரப்பினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் அடுத்த மாதம் வரை மேலும் நான்கு மாவட்டங்களில் நடைபெறும் இத்திட்டத்தில் பங்கு கொள்ளும்படி வேலை தேடுவோரைக் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் சொன்னார்.

இங்குள்ள ஸ்தபாப்பாக், ஆயர் பானாஸ் சமூக மண்டபத்தில் இன்று நடைபெறும் ஜோப்கேர் வேலை வாய்ப்புத் திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி கிள்ளான், டேவான் ஹம்சாவில் தொடங்கிய இந்த வேலை வாய்ப்பு பயணத் தொடர் வரும் ஜூன் மாதம் 25 ஆம் தேதி சபாக் பெர்ணாம், டேவான் ஸ்ரீ பெர்ணமில் முடிவடைகிறது.

இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் https://uppsselangor.wixsite.com/my-site  எனும் அகப்பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

ஜோப்கேர் வேலை வாய்ப்பு திட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் வருமாறு-

-கோம்பாக், டேவான் தாமான் கோம்பாக் (ஜூன் 4)
-டேவான் டத்தோ ஹொர்மாட், தஞ்சோங் காராங் ( ஜூன் 11 மற்றும் 12)
-கோல லங்காட், டேவான் பந்திங் பாரு (ஜூன் 18)
-சபாக் பெர்ணம், டேவான் ஸ்ரீ பெர்ணம் (ஜூன் 25)


Pengarang :