ECONOMYNATIONAL

நாட்டிற்குள் நுழைவதற்கு கட்டிடங்கள், விளக்கொளியை வழிகாட்டியாக பயன்படுத்தும் சட்டவிரோதக் குடியேறிகள்

பாடாங் பெசார், மே 25– நாட்டிற்குள் கள்ளத்தனமாக நுழைவற்கு தொழிற்சாலை கட்டிடங்கள் மற்றும் சூப்பிங் மற்றும் பாடாங் பெசார் நகரின் விளக்கொளி ஆகியவற்றை சட்டவிரோதக் குடியேறிகள் வழிகாட்டியாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

வழக்கமாக, இந்த கள்ளக் குடியேறிகள் பின்னிரவு 1.00 மணி முதல் அதிகாலை 6.00 மணி வரையிலான நேரத்தில் தாய்லாந்திலிருந்து பாடாங் பெசார் எல்லையில் நுழைவதாக பொது நடவடிக்கைப் பிரிவின் 18 பட்டாளத்தின் செயலாக்க அதிகாரி சூப்ரிண்டெண்டன் ரம்லி வான் சாலின் கூறினார்.

அந்த கள்ளக் குடியேறிகள் பாடாங் பெசார் வந்தடைந்ததும் அவர்களை உள்நாட்டினர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுச் செல்கின்றனர் என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

அந்நியக் குடியேறிகளின் வழித்தடங்கள் பெரும்பாலும் பொட்டல் வெளிகளாக இருப்பது பொது நடவடிக்கை பிரிவு, மற்றும் அரச மலேசிய போலீஸ் படையின் வான் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் சொன்னார்.

பிடிபடும் அந்நியக் குடியேறிகளில் பெரும்பாலோர் 17 முதல் 40 வயது வரையிலான மியன்மார் பிரஜைகளாகவும் அவர்கள் 30 க்கும் குறைவானோரைக் கொண்ட குழுவினராகவும் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

தாய்லாந்திலிருந்து மலேசியா கொண்டு வருவதற்கு மியன்மார் பிரஜை ஒருவருக்கு 3,000 வெள்ளிக் கட்டணத்தை உள்ளூர் நபர்கள் வசூலிப்பதாக கூறிய அவர், நாட்டின் எல்லைக்குள் கட்டம் கட்டமாக நுழைவதற்கு கணிசமான எண்ணிக்கையிலான மியன்மார் பிரஜைகள் காத்திருப்பது தங்களின் உளவு நடவடிக்கையில் தெரிய வந்துள்ளது என்றார்.


Pengarang :