ECONOMYHEALTHSELANGOR

இலவச பரிசோதனைத் திட்டத்தில் எட்டு வித நோய்களுக்கு 115,928 சோதனை இட ஒதுக்கீடுகள்- சித்தி மரியா தகவல்

 கிள்ளான், மே 25 – மாநிலம் முழுவதும் நடைபெறும் “சிலாங்கூர் சாரிங்“ திட்டத்தில் எட்டு வகையான உடல்நலப் பரிசோதனைகளுக்கு மொத்தம் 115,928 இட ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

பொதுவான உடல் பரிசோதனை, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைக்கு 31,000 இடங்களும், கண் பரிசோதனைக்கு 12,400 இடங்களும், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கு 1,680 இடங்களும், உடல் கழிவு இரத்த பரிசோதனைக்கு 5,936 இடங்களும், புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைக்கு 1,232 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த மருத்துவ பரிசோதனைத்  திட்டம் வரும் மே 22 முதல் செப்டம்பர் 4 வரை நடைபெறும் என்றும்  ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 500 முதல் 1,000 பேர் வரை இத்திட்டத்தின் வழி பயனடைவர் என்றும் அவர் சொன்னார்.

இந்த திட்டம் ஆரோக்கியமானவர்களுக்கும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குமானது.ஏனென்றால், கடைசியாக எப்போது சுகாதார பரிசோதனையை மேற்கொண்டோம் என்பதைக்கூட தெரியாத பலர் இன்னும் இருக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆகவே,  நாங்கள் இந்த சுகாதாரப் பரிசோதனைத் திட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். இதன் மூலம் அவர்கள் நோயை ஆரம்ப  நிலையிலேயே கண்டறிந்து, அது  கடுமையான நோயாக மாறுவதற்கு முன்பே சிகிச்சையைப் பெற முடியும். சிகிச்சையை விட தடுப்பு  நடவடிக்கையே சிறந்தது என்று அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள  விண்டாம் அக்மார் ஹோட்டலில் நடைபெற்ற சிலாங்கூர் சாரிங் திட்டம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்த பரிசோதனையில் பங்கேற்றவர்கள் செலங்கா செயலி மூலம் 72 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகளைப் பெறுவார்கள் என்று டாக்டர் சித்தி மரியா கூறினார்.

மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இதன் தொடர்பான தகவல்களை செலங்கா செயலியில்  பெறலாம்  என்று அவர்  குறிப்பிட்டார்.

சிலாங்கூர் அரசாங்கம் சிலாங்கூர் சாரிங் திட்டத்திற்காக 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 39,000 பேர் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இலவச மருத்துவப் பரிசோதனை தொடர்பான மேல் விபரங்களை  selangorsaring.selangkah.my  என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது 1-800-22-6600 என்ற செல்கேர் ஹோட்லைனைத் தொடர்பு கொள்ளலாம். இது தவிர  drsitimariah.com/talian-suka  எனும் அகப்பக்கம் வாயிலாக சிலாங்கூர் சமூக தன்னார்வலர் அமைப்புடனும் தொடர்பு கொள்ள முடியும்.


Pengarang :