ECONOMYSELANGOR

மீட்புப் பணிகளில் தீயணைப்புத் துறைக்கு உதவ தன்னார்வலர் குழு- சிலாங்கூர் அரசு அமைக்கும்

ஷா ஆலம், மே 25- பேரிடரின் போது மீட்பு பணிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு உதவுவதற்கு ஏதுவாக சிலாங்கூர் இலிட் தன்னார்வலர் குழுவை (செர்வ்) சிலாங்கூர் அரசு உருவாக்கும்.

தொடக்க கட்டமாக செர்வ் அமைப்பின் 100 தன்னார்வலர்களுக்கு தீயணைப்புத் துறையினர் முழுமையான பயிற்சியை வழங்குவர் என்று இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

இத்திட்டத்திற்கு சிலாங்கூர் இளைஞர் இயக்கத்தின் (பி.இ.பி.எஸ்.) தலைமைத்துவத்தால் தகுதி உள்ள செர்வ் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுவோருக்கு சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை குறிப்பிட்ட காலத்திற்கு பயிற்சிகளை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதில் தீயணைப்புத் துறையினருக்கு உதவுவதற்கும் மாநிலத்தில்  பேரிடர் ஏற்படும் பட்சத்தில் முதல் தரப்பினராக சம்பவ இடத்தை அடைவதற்கும் ஏதுவாக இக்குழு அமைக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இங்குள்ள புக்கிட் ஜெலுத்தோங் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை  தலைமையகத்தில் மாநில தீயணைப்புத் துறை இயக்குநர் நோராஸாம் காமிசுடன் சந்திப்பு நடத்தியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த செர்வ் இலிட் குழுவை உருவாக்குவதற்கு இவ்வாண்டில் ஒரு  லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுவதாக கூறிய அவர், இக்குழு வரும் நவம்பர் மாதவாக்கில்  பணியைத் தொடக்கும் என்றார்.

பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தன்னார்வலர்கள் போதுமான திறனைக் கொண்டிராததை கடந்த கால அனுபவங்கள் உணர்த்துவதைக் கருத்தில் கொண்டு இந்த செர்வ் இலிட் குழு உருவாக்கப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :