ECONOMYSELANGOR

சிலாங்கூரில் காடு, மலைகளில் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்

ஷா ஆலம், மே 25– விபத்துகளில் சிக்கியவர்களை விரைந்து மீட்பதற்கு ஏதுவாக சிலாங்கூரிலுள்ள சில காடுகள் மற்றும் மலைகளில் தற்காலிக ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் (ஹெலிபேட்) அமைக்கப்படும்.

சிலாங்கூர் மாநில வன இலாகாவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நேராஸாம் காமீஸ் கூறினார்.

காடுகளில் வழி தவறிப் போவது, நீரில் மூழ்குவது, காயமடைவது மற்றும் மரணச் சம்பவங்கள் நிகழும் பட்சத்தில் மீட்பு பணிகளை எளிதாக மேற்கொள்ள இந்த ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் உதவும் என்று அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்டவர்களை மலையுச்சியிலிருந்து கால்நடையாக மலையடிவாரத்திற்கு கொண்டு வருவதில் மீட்பு பணியாளர்கள் கடும் சவாலை எதிர்நோக்குவதோடு அப்பணியை மேற்கொள்வதில் மிகுந்த தாமதமும் ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் ஹெலிபேட் அமைப்பதற்கு ஏற்ற இடங்களை மாநில வன இலாகாவுடன் இணைந்து நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். வரும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதவாக்கில் அந்த தளங்கள் அமைக்கப்படும் என்றார் அவர்.

இங்குள்ள புக்கிட் ஜெலுதோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மானுடன் சந்திப்பு நடத்தியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மலையேறும் நடவடிக்கைகளுக்கு பிரசித்தி பெற்ற அல்லது அடிக்கடி விபத்துகள் நிகழக்கூடிய கோல லங்காட் மற்றும் உலு சிலாங்கூர் பகுதிகள் மீது தீயணைப்புத் துறையும் வன இலாகாவும் முக்கிய கவனம் செலுத்தும் என்றும் அவர் சொன்னார்.

நடப்பு வறட்சி நிலை குறித்து கருத்துரைத்த நோராஸாம், அடிக்கடி தீவிபத்து ஏற்படும் சாத்தியம் உள்ள காட்டுப்பகுதிகளில் தாங்கள் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :