ECONOMYNATIONAL

மலேசியாவின் ஏப்ரல் மாத வர்த்தகம் 21.3 விழுக்காடு அதிகரிப்பு

கோலாலம்பூர், மே 27- மலேசியாவின் ஏப்ரல் மாதத்திற்கான வர்த்தகம் 21.3 விழுக்காடு அதிகரித்து 23,140 கோடி வெள்ளியாகப் பதிவானது.  இதில் ஏற்றுமதி  மதிப்பு 12,750 கோடி வெள்ளியாகவும் இறக்குமதி மதிப்பு 10,390 கோடி வெள்ளியாகவும் இருந்தது.

ஜவுளி மற்றும் ஆடை ஆபரண ஏற்றுமதி இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 18 விழுக்காடு அதிகரித்து 49 கோடியே 99 லட்சம் வெள்ளியாக உயர்வு கண்டுள்ளதாக மலேசிய புள்ளி விபரத் துறை கூறியது.

ஜவுளி மற்றும் ஆடை ஆபரண  ஏற்றுமதியைப் பொறுத்த வரை 27 கோடியே 27 லட்சம் வெள்ளி (54.5 விழுக்காடு) வர்த்தகத்துடன் ஜொகூர் முதலிடம்  வகிக்கிறது. 10.43 கோடி வெள்ளி வர்த்தகத்துடன் சிலாங்கூர் இரண்டாவது இடத்திலும் 4.1 கோடி வெள்ளி வர்த்தகத்துடன் பெர்லிஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

அதே சமயம், நாட்டின் ஏற்றுமதியும் கடந்த ஏப்ரல் மாதம் 20.7 விழுக்காடு உயர்வு கண்டு 2,190 கோடி வெள்ளியாக ஆனது. கடந்தாண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,870 கோடி வெள்ளியாக இருந்தது என புள்ளி விபரத்துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் ‘மஹிடின் கூறினார்.

நாட்டில் ஏற்றுமதியைப் பொறுத்த வரை ஐந்து மாநிலங்கள் முன்னிலை வகிப்பதாக கூறிய அவர், 29.3 விழுக்காட்டு ஏற்றுமதியுடன் பினாங்கு முதலிடத்திலும் 20 விழுக்காட்டுடன் ஜொகூர் இரண்டாம் இடத்திலும் 19.5 விழுக்காட்டுடன் சிலாங்கூர் மூன்றாம் இடத்திலும் 8.1 விழுக்காட்டுடன் சரவா நான்காவது இடத்திலும் 4.3 விழுக்காட்டுடன் கோலாலம்பூர் ஐந்தாவது இடத்திலும் உள்ளன என்றார்.

இறக்குமதியை பொறுத்தமட்டில் 25.6 விழுக்காட்டுடன் சிலாங்கூர் முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்த நிலையில் பினாங்கு (23.4 விழுக்காடு), ஜொகூர் (18.3 விழுக்காடு) கோலாலம்பூர், (7.3 விழுக்காடு), கெடா (5.7 விழுக்காடு) ஆகிய மாநிலங்கள் உள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :