ECONOMYSELANGOR

அக்ரோ சிலாங்கூர் திட்டத்தில் 22 வேளாண் தொழில்முனைவோர் பங்கேற்பு

ஷா ஆலம், மே 27- இங்குள்ள சென்ட்ரல் ஐ-சிட்டியில் நடைபெறும்  “ஜெலாஜா அக்ரோ சிலாங்கூர்“ திட்டத்தில் விவசாயம் சார்ந்த பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள  22 தொழில்முனைவோரை சம்பந்தப்படுத்திய கண்காட்சி சாவடிகள் இடம்பெறவுள்ளன.

இந்த வேளாண் பயணத் திட்டத்தில் விற்பனை கடைகள், புத்தாக்க தொழில்நுட்ப மற்றும் விவசாய பொருள் கண்காட்சி ஆகியவை இடம் பெறவுள்ளதாக விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

ஜெலாஜா அக்ரோ சிலாங்கூர் என்பது ஒரு மினி சிலாங்கூர் அக்ரோ பெருவிழாவாகும். விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் பயிரீட்டில் காணப்படும் மேம்பாடுகளை பகிர்ந்து கொள்வதை இத்திட்டம் இலக்காக கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

அதிகளவிலான இளைஞர்கள் மற்றும் மகளிரை விவசாயத் துறையின்பால் ஈர்ப்பதை இந்த திட்டம் முதன்மை இலக்காக கொண்டுள்ளது. அதே சமயம், உற்பத்தியாளர்கள், வணிகர்கள் மற்றும் பயனீட்டாளர்களுக்கிடையே வர்த்தக ஒருங்கமைப்பை உருவாக்குவதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும் என்றார் அவர்.

இந்த நிகழ்வில் விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப அம்சங்கள் வருகையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும். மேலும், இங்குள்ள விற்பனை மையங்களின் மூலம் குறைந்த விலையில் விவசாயப் பொருள்கள் விற்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழுவின் மூலம் இந்த ஜெலாஜா சிலாங்கூர் அக்ரோ திட்டத்தை மாநில அரசு இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு சென்ட்ரல் ஐ-சிட்டியில் நடத்துகிறது.


Pengarang :