ECONOMY

போலீஸ் சோதனையில் நால்வர் கைது- 14 லட்சம் வெள்ளி ஷாபு போதைப் பொருள் பறிமுதல்

காஜாங், மே 30- இங்குள்ள பத்து 11, செராஸ், கடை வரிசையில் கடந்த செவ்வாயன்று போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் நால்வர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து 14 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 39 கிலோ ஷாபு வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

மாலை 6.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையில் உக்ரேனிய பிரஜை உள்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைவர் ஏசிபி அகமது ஜெப்ரி அப்துல்லா கூறினார்.

முப்பது முதல் 44 வயது வரையிலான அந்த ஆடவர்களிடமிருந்து மெர்சிடிஸ் பென்ஸ், டோயோட்டா வியேஸ் மற்றும் பெரேடுவா பெஸா ரக கார்கள் பறிமுதல்  செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கும்பல் கடந்த ஆறு மாத காலமாக கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் போதைப் பொருளை விற்பனை செய்து வரும் தரப்பினருக்கு ஷாபுவை விநியோகம் செய்து வந்துள்ளது தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மொத்தம் 39 பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருந்த போதைப் பொருளை  அந்த உக்ரேனிய ஆடவரும் இதர மூவரும் பெரேடுவா காரிலிருந்து எடுத்துக் கொண்டிருந்த போது போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்ததாக இங்குள்ள காஜா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.

இக்கும்பலிடமிருந்து 17.9 லட்சம் வெள்ளி மதிப்புள்ள தங்கச் சங்கிலிகள் தாய்லாந்து நாணயம் உள்ளிட்ட பொருள்களை தாங்கள் கைப்பற்றியதாக கூறிய அவர், இக்கும்பலின் தலைவன் உள்பட இதர உறுப்பினர்களை அடையாளம் காணும் பணியில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.


Pengarang :