ECONOMYHEALTHNATIONAL

சிலாங்கூரில் டிங்கி சம்பவங்கள் அதிகரிப்பு- மே 21 வரை 920 பேர் பாதிப்பு

புத்ரா ஜெயா, மே 31– சிலாங்கூரில்  டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து மே 15 முதல் மே 21 வரையிலான 20 வது நோய்த் தொற்று வாரத்தில் 920 சம்பவங்களாகப் பதிவாகியுள்ளது.

இம்மாதம் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான 19 வது நோய்த் தொற்று வாரத்தில் மாநிலம் முழுவதும் 650 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியிருந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இதன் வழி நாட்டில் அந்த ஆட்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,145 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் இந்த எண்ணிக்கை 10,597 ஆக இருந்தது என்றார் அவர்.

டிங்கி காய்ச்சலால் கடந்தாண்டின் இதோ காலக் கட்டத்தில் ஐவர் மரணமடைந்த வேளையில் இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என்று அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

கூட்டரசு பிரதேசத்தில் 121 டிங்கி சம்பவங்கள் பதிவானதாக கூறிய அவர், அதற்கு அடுத்த நிலையில் சபா (119), ஜொகூர் (82), கெடா (43) ஆகிய மாநிலங்கள் உள்ளன என்றார்.

டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பொது மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதோடு தங்கள் வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :